சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையொட்டி அங்கு 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி இல்லை என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையொட்டி அங்கு 1,5௦௦ போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈத்கா மைதானம்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஈத்கா மைதானம் உள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் கூட்டு தொழுகையில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக அரசு சார்பில் அங்கு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மேலும் அந்த மைதானத்தில் இந்து மத நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று சில அமைப்புகள் குரல் எழுப்பின. அதற்கு முஸ்லிம் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
யாருக்கு சொந்தம்?
இந்த நிலையில் அந்த மைதானம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினை ஏற்பட்டது. கர்நாடக வக்பு வாரியம், ஈத்கா மைதானம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி பெங்களூரு மாநகராட்சியிடம் கடிதம் வழங்கியது. அதற்குரிய சில ஆவணங்களையும் அந்த வாரியம் கொடுத்தது.
அவற்றை பரிசீலனை செய்த மாநகராட்சி அதிகாரிகள், வக்பு வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். ஈத்கா மைதானம் மாநில அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று மாநகராட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை எதிர்த்து வக்பு வாரியம் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் இ்டைக்கால உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு, ஈத்கா மைதானத்தில் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும், பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் கூறியது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை
இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஈத்கா மைதானத்தில் ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று கூறி உத்தரவிட்டனர்.
இதையடுத்து அங்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட இந்து அமைப்பினர் அனுமதி கோரினர். இதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைெபற்று வந்தன. மேலும் அங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பட்சத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கர்நாடக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்தது. இதனால் அங்கு கடந்த வாரம் முதலே போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இரவு-பகலாக அங்கு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தனர்.
மேல்முறையீடு
இந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து வக்பு வாரியம் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 30-ந்தேதி (அதாவது நேற்று) விசாரிப்பதாக கூறியது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை நடைபெற்றது.
அந்த 2 நீதிபதிகள், எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும் அந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. வக்பு வாரியம் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபலும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோட்டகியும் ஆஜராகி தங்களின் தரப்பு வாதங்களை எடுத்துவைத்தனர்.
அனுமதி இல்லை
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஈத்கா மைதானத்தில் முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு புதிதாக விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வழங்க கூடாது என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.
1,500 போலீசார் குவிப்பு
மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சாம்ராஜ்பேட்டையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ரவுடிகள் என 300 பேரை கண்டுபிடித்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அங்கு எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் அமைதியை நிலை நாட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டு இருந்தனர்.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த மனு மீது விசாரணை நடைபெறுவதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில் ஈத்கா மைதானத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் கர்நாடக அதிரடிப்படை, அதி விரைவுப்படை போலீசாரும் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் சாம்ராஜ்பேட்டையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.