மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் அசாமில் தங்கியுள்ளனரா? என்பது குறித்து தெரியாது; அசாம் முதல்-மந்திரி
அசாமில் மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனரா? என்பது குறித்து தனக்கு தெரியது என்று அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
டெல்லி,
மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இந்த சம்பவம் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் அசாமில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பது குறித்து டெல்லி வந்துள்ள அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா, அசாமில் நிறைய நல்ல ஓட்டல்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அங்கு சென்று தங்கி கொள்ளலாம். மராட்டிய எம்.எல்.ஏ.க்கள் அசாமில் தங்கியுள்ளனரா? என்பது குறித்து எனக்கு தெரியாது. மற்ற மாநிலங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் வந்து அசாமில் தங்கிக்கொள்ளலாம்' என்றார்.