ஷிண்டேவுக்காக அனைத்தும் செய்தேன்... கட்சியை உடைக்க பார்க்கிறார்கள்; உத்தவ் தாக்கரே வேதனை

ஏக்நாத் ஷிண்டேவுக்காக அனைத்தும் செய்து தந்தேன், ஆனால் கட்சியை உடைக்க பார்க்கிறார்கள் என உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-24 12:06 GMT



புனே,



மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா கட்சியின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு, அசாமில் முகாமிட்டு உள்ளது மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை அந்த பதவியில் அமர்த்தும் முடிவுக்கு துணை சபாநாயகர் ஒப்புதல் வழங்கி விட்டார். இந்த சூழலில், எதிர்தரப்பில் சேர்ந்துள்ள சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. எனினும் ஷிண்டே கூறும்போது, மொத்தமுள்ள சிவசேனாவின் 55 எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 12 சுயேச்சைகளின் ஆதரவு தனக்கு உள்ளது என கூறியுள்ளார்.

தங்களது அணியே உண்மையான சிவசேனா என கூறியுள்ள ஷிண்டே, 37 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்திட்ட கடிதங்களையும், துணை சபாநாயகர் ஜிர்வால், கவர்னர் பகத்சிங் கோஷியாரி மற்றும் சட்டசபை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட தலைவர்களுடனான காணொலி சந்திப்பு வழியேயான கூட்டம் ஒன்றை உத்தவ் தாக்கரே இன்று நடத்தினார். இதில் பேசிய தாக்கரே, ஆட்சி அதிகாரங்களை வைத்து கொண்டு நான் செய்வதற்கு எதுவும் இல்லை என இதற்கு முன்பே நான் கூறியிருக்கிறேன்.

சிவசேனாவை விட்டு விலகுவதற்கு பதில் உயிரை விடுவோம் என எப்போதும் கூறி வந்தவர்கள், இன்று ஓடி விட்டனர். எதிர்தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கட்சியை உடைக்க விரும்புகிறார்கள். முதல்-மந்திரியாக நான் வருவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை. வர்ஷா பங்களாவை விட்டு நான் வெளியேறி விட்டேன். ஆனால், போராடும் தைரியம் என்னுடன் உள்ளது என கூறியுள்ளார்.

ஷிண்டேவுக்காக எல்லா விசயங்களையும் செய்தேன். நான் வகித்து வந்த துறையை கொடுத்தேன். அவரது மகன் எம்.பி.யாக உள்ளார். ஆனால், எனது மகனை பற்றிய விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

அவர்களுக்கு தைரியம் இருக்கிறது என்றால், பாலாசாஹேப் மற்றும் சிவசேனாவின் பெயரை எடுத்து கொள்ளாமல் மக்களிடம் செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்