வரதட்சணையாக பயன்படுத்திய பழைய பொருளா...? கோபத்தில் திருமணத்தையே நிறுத்திய மணமகன்..! நடந்தது என்ன...?

வரதட்சணையாக பெண் வீட்டார் பழைய பர்னிச்சர்களை அளித்ததாக கூறி திருமண தினத்தன்று மாப்பிள்ளை வீட்டார்கள் யாரும் திருமணத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், திருமணம் நின்று போனது.

Update: 2023-02-21 09:52 GMT

ஐதராபாத்,

திருமணம் என்றாலே சில மாப்பிள்ளைகளுக்கு 'ஜாக்பாட்' அடிப்பதுபோல, பெண் வீட்டாரிடம் வரதட்சணை என்ற பெயரில் பொன்னும், பொருளும் 'வசதியாக' பெற்று வருகின்றனர். என்னதான் வரதட்சணை தடைச்சட்டம் இருந்தாலும், இதனை சாஸ்திரம் சம்பிரதாயமாகவே சிலர் செய்து வருகின்றனர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் நிகழ்வுகளும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. சில திருமணங்கள் இதனால் நின்றும் போயுள்ளன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.,19) திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், அன்றைய தினத்தில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணமும் நின்றது. இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரித்ததில், பெண் வீட்டினர் வரதட்சணையாக அளித்த பொருட்களில் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பர்னீச்சர்களையும் கொடுத்துள்ளதாக மாப்பிள்ளையின் தந்தை குற்றம் சாட்டி திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசில் புகாரளித்த பெண்ணின் தந்தை கூறுகையில், 'அவர்கள் கேட்ட பொருட்களை நாங்கள் தரவில்லை எனவும், பழைய பர்னீச்சர்களை கொடுத்ததாகவும் மாப்பிள்ளை வீட்டார் கூறினர். திருமணத்தை ஏற்பாடு செய்து உறவினர்கள், விருந்தினர்கள் எல்லாரையும் அழைத்தேன். ஆனால், திருமணத்திற்கு மாப்பிள்ளை வரவே இல்லை. அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது மாப்பிள்ளையின் தந்தை என்னை தகாத முறையில் நடத்தினார் என குற்றம் சாட்டினார்.

மாப்பிள்ளை வீட்டார் மீது வரதட்சணை தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்