கணவன் - மனைவி இடையே பிளைட்டில் நடந்த பைட்: அவசரமாக டெல்லியில் இறங்கிய ஜெர்மனி விமானம்

அண்மைக்காலமாக விமானங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது, விமானப் பயணத்தையே தவிர்த்துவிடலாம் என யோசிக்க வைத்து விடுகிறது.

Update: 2023-11-29 09:33 GMT

புதுடெல்லி,

ஜெர்மனியில் இருந்து பாங்காங்குக்கு சென்ற விமானம் ஒன்றில் கணவன் - மனைவி இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் அந்த விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணிக்கு திடீர் மாரடைப்பு, விமானத்தில் இயந்திரக் கோளாறு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற ஆபத்தான காரணங்களுக்காவே விமானம் இதுபோன்று அவசரமாக தரையிறக்கப்படும். ஆனால், அந்த கணவன் - மனைவி சண்டை எவ்வளவு பயங்கரமானதாக இருந்திருந்தால் விமானி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பார் என யோசிக்க வைக்கிறது.

அண்மைக்காலமாக விமானங்களில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது, விமானப் பயணத்தையே தவிர்த்துவிடலாம் என யோசிக்க வைத்து விடுகிறது. வயிறு முட்ட மது அருந்திவிட்டு அருகில் இருக்கும் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த தொழிலதிபர், விமானத்தின் அவசரக் கதவை பாத்ரூம் என நினைத்து திறந்த இளைஞர், விமானி அறைக்குள் அத்துமீறி நுழைந்த போதை ஆசாமி என திகிலூட்டும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுப்தான்சா நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர். இந்த சூழலில், விமானத்தில் இருந்த கணவன் - மனைவிக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது.

விமானத்தில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். ஒருகட்டத்தில், கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசினர். இதனால் மற்ற பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், இவர்களின் சண்டையால் விமான ஜன்னல்களில் ஏதேனும் விரிசல் விழுந்துவிட்டால் விமானமே விபத்துக்குள்ளாகிவிடுமே என அனைவருக்கும் பயம் வந்துவிட்டது. இதையடுத்து, விமானக் குழுவினர் விமானியிடம்  விமானத்தை அவசரமாக தரையிறக்குமாறு தெரிவித்தனர்.

அப்போது, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் விமானம் பறந்து கொண்டிருந்ததால், பாகிஸ்தானில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானி அனுமதி கேட்டார். ஆனால், பாகிஸ்தான் அனுமதி மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் அனுமதியை பெற்ற பிறகு அந்த விமான நிலையத்தில் ஜெர்மனி விமானம் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த கணவன் மனைவியை அங்கிருந்த போலீசாரிடம் விமானக் குழுவினர் ஒப்படைத்தனர். ஒரு சாதாரண கணவன் - மனைவி சண்டையால் விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்