இந்தியாவுக்கு மனித நலன் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது... நிலநடுக்க மீட்பு குழுவிடம் உரையாடிய பிரதமர் மோடி

‘ஆபரேசன் தோஸ்த்’தில் ஈடுபட்டவர்கள் உடனான எனது உரையாடலை எப்போதும் நினைவில் கொள்வேன் என கூறி பிரதமர் மோடி வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

Update: 2023-02-21 09:14 GMT


புதுடெல்லி,


துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் வரலாறு காணாத அளவில் கடந்த 6-ந்தேதி அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி, மொத்தம் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்தியா சார்பில் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய ராணுவ குழுவினர் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆபரேசன் தோஸ்த் என்ற பெயரில் துருக்கிக்கு உணவு, போர்வை, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதனுடன் இந்தியாவில் இருந்து ராணுவ மருத்துவ குழுவும் சென்றது.

துருக்கியில் மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், இந்திய ராணுவ குழுவினரும் சொந்த நாடு திரும்பி உள்ளனர். இதன்பின், ராணுவ மருத்துவமனையின் லெப்டினன்ட் கர்னல் ஆதர்ஷ் சர்மா நிவாரண பணி பற்றி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, இந்த பேரிடரை எதிர்கொள்ள எங்களை அனுப்பி வைப்பது என்ற முடிவை எடுத்த அரசாங்கத்திற்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எங்களது ராணுவ மருத்துவமனையை துருக்கியில் அமைத்து, உடனடியாக சிகிச்சை அளிக்கும்படி கூறப்பட்டது. நாங்கள் சென்ற ஒரு சில மணிநேரத்தில் அதற்கு தயாரானோம். கூடாரம் அமைக்கப்பட்டது. சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க தொடங்கினோம்.

ஒட்டு மொத்த மருத்துவ பணியில் நாங்கள் 3,600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம். சிறிய மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றன. சரியான தருணத்தில் மருத்துவ சிகிச்சைளை மக்களுக்கு அளித்து, அவர்களது மனங்களில் இடம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்பட்டது.

அந்த சாதனையை நாங்கள் படைத்து விட்டோம் என்றே நான் நினைக்கிறேன் என கூறினார். துருக்கியில் உள்ள நோயாளிகள் நன்றியுடையவர்களாக இருந்தனர். ஏனெனில், அந்நாட்டில் சுகாதார நல அமைப்பு அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. அதனால், நமது நாட்டுக்கும், குழுவினருக்கும் அதிக நன்றியுடையவர்களாக துருக்கி மக்கள் காணப்பட்டனர்.

அந்த வகையில், நாங்கள் அந்நாட்டில் இருந்து, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து, நாடு திரும்பிய மீட்பு மற்றும் நிவாரண குழுவினரிடம் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அவர் பேசும்போது, வாசுதைவ குடும்பகம் பற்றி நமது கலாசாரம் நமக்கு கற்று தந்துள்ளது.

உலகை ஒரே குடும்பம் ஆக நாம் நடத்த வேண்டும் என்பதே அது. மனிதகுலத்திற்கு சோகம் ஏற்படும்போது, அது உலகின் எந்த பகுதியாக இருப்பினும், மனித நலனே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்ற உறுதியான நிலைக்கு நமது நாடு வந்துவிடும் என கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியா மீது நல்லெண்ணம் கொண்டு உள்ளது என கூறியுள்ள பிரதமர் மோடி, அதிகாரிகளுடனான உரையாடல் அடங்கிய வீடியோ ஒன்றையும் தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

அந்த வீடியோவில், துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை பிரதமர் மோடி பாராட்டும் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

'ஆபரேசன் தோஸ்த்'தில் ஈடுபட்டவர்கள் உடனான எனது உரையாடலை எப்போதும் நான் நினைவில் கொள்வேன். இந்த நடவடிக்கையானது, உதவி தேவைப்படுவோருக்கு இந்தியா எப்போதும் உற்றதுணையாக இருக்கும் என எடுத்து காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்