ஆட்கடத்தல் வழக்கு; பஞ்சாப் பாடகர் தலேர் மெகந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
2003ம் ஆண்டு நடந்த ஆட்கடத்தல் வழக்கில் பஞ்சாப் பாடகர் தலேர் மெகந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
பாட்டியாலா,
பஞ்சாப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடல்கள் எழுதுபவர் உள்ளிட்ட பன்முக தன்மைகளை கொண்டவர் தலேர் மெகந்தி. நடன குழுவையும் நடத்தி வருகிறார். இதற்காக கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு செல்லும்போது, சட்டவிரோத வகையில் அவர் அழைத்து செல்லும் நபர்களிடம் பதிலுக்கு பணம் பெற்று கொள்ளும் வழக்கம் கொண்டிருந்து உள்ளார்.
பஞ்சாப்பின் பாட்டியாலா நீதிமன்றம் அவருக்கு 2003ம் ஆண்டு நடந்த ஆட்கடத்தல் வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டு உள்ளது.
2003ம் ஆண்டில் தலேர், அவரது மறைந்த சகோதரரான ஷம்ஷேர் சிங் மற்ற 2 பேர் மீது ஆட்கடத்தல் வழக்கை பாட்டியாலா போலீசார் பதிவு செய்தனர். முதல் புகாரை தொடர்ந்து போலீசாருக்கு பாடகர் மீது இதேபோன்று 35 புகார்கள் வந்துள்ளன.
வெளிநாட்டு பயணத்திற்கு பதிலாக ரூ.12 லட்சம் வரை பணம் கைமாறப்பட்டு உள்ளது என பல புகார்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் அதிரடி சோதனை நடத்தி போலீசார் சில ஆவணங்களையும் கைப்பற்றி இருந்தனர்.
இதுபற்றி கடந்த 2018ம் ஆண்டு நடந்த வழக்கின் மறுவிசாரணையே இன்று நடந்துள்ளது. 2018ல் அவர் மீது இதே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அதில், தலேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதற்கு முன்பும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தலேர் மெகந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த கோர்ட்டு அவரை கைது செய்யும்படி உத்தரவிட்ட நிலையில், போலீசார் மெகந்தியை உடனடியாக கைது செய்தனர்.