உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது

9 மாதங்களுக்கு பிறகு உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது. பா.ஜனதாவை சேர்ந்த ஈரேஷ் மேயராகவும், உமா முகுந்தா துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Update: 2022-05-28 21:29 GMT

உப்பள்ளி

9 மாதங்களுக்கு பிறகு உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதில் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது. பா.ஜனதாவை சேர்ந்த ஈரேஷ் மேயராகவும், உமா முகுந்தா துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் 86 வார்டுகள் உள்ளது. இந்த மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக மேயர், துணை மேயர் தேர்தல் நடக்காமல் இருந்தது.

இந்த நிலையில் மேயர் பதவி பொதுப்பிரிவை சேர்ந்த ஆணுக்கும், துணை மேயர் பதவி பொதுப்பிரிவை சேர்ந்த பெண்ணுக்கும் ஒதுக்க வேண்டும் தார்வார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, மேயர், துணை மேயர் பதவிகளை பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கி உத்தரவிட்டார். இதையடுத்து உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தல் 28-ந்தேதி (அதாவது நேற்று) நடக்கும் என்று கலெக்டர் அறிவித்து இருந்தார்.

மேயர், துணை மேயர் தேர்தல்

அதன்படி நேற்று காலை உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் தேர்தல் நடந்தது. இதில், மேயர் பதவிக்கு பா.ஜனதாவை சேர்ந்த ஈரேஷ் அஞ்சட்டகேரியும், காங்கிரஸ் சார்பில் மயூர் போரேவும் நிறுத்தப்பட்டனர். இதேபோல், துணை மேயர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் உமா முகுந்தாவும், காங்கிரஸ் சார்பில் தீபாவும் நிறுத்தப்பட்டனர்.

மதியம் 1.30 மணிக்கு உறுப்பினர்கள் கைகளை உயர்த்துவதன் மூலமாக தேர்தல் நடந்தது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் ஈரேசிற்கு ஆதரவாக 50 கவுன்சிலர்கள் கைகளை உயர்த்தினர். காங்கிரஸ் வேட்பாளர் மயூர் போரேவுக்கு ஆதரவாக 31 கவுன்சிலர்கள் கைகளை உயர்த்தினர். இதனால், பா.ஜனதா வேட்பாளர் ஈரேஷ் வெற்றி பெற்றார்.

இதேபோல், துணை மேயராக போட்டியிட்ட பா.ஜனதாவை சேர்ந்த உமா முகுந்தாவுக்கு 51 கவுன்சிலர்களும், காங்கிரசை சேர்ந்த தீபாவுக்கு 30 கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் உமா முகுந்தா வெற்றி பெற்றார்.

பா.ஜனதா கைப்பற்றியது

இதன்மூலம் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது. மேலும் மாநகராட்சி புதிய மேயராக ஈரேசும், துணை மேயராக உமா முகுந்தாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழை வழங்கினார்.

மேலும் வெற்றி பெற்ற ஈரேஷ், உமா முகுந்தாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, முன்னாாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், பா.ஜனதா கவுன்சிலர்கள், தேர்தல் அதிகாரி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

3-வது முறையாக...

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி தேர்தல் நடந்து 9 மாதங்களுக்கு பிறகு மேயர், துணை மேயர் தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியை பா.ஜனதா 3-வது முறையாக கைப்பற்றி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்