சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு - போலி டாக்டர் கைது
சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததையடுத்து, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
கோரக்பூர்,
உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததையடுத்து, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையை நடத்தி வந்த போலி டாக்டரும் கைது செய்யப்பட்டார்.
ஜெயின்பூர் பகுதியைச் சேர்ந்த சோனாவத் தேவி என்ற 30 வயது கர்ப்பிணிப் பெண் கோரக்பூரில் உள்ள குல்ரிஹா பகுதியில் உள்ள சத்யம் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர், மருத்துவமனை மேலாளர் ரஞ்சித் நிஷாத் என்பவர் மீது போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து விசாரணையில், நிஷாத் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும், வேறு சில மருத்துவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி மருத்துவமனை நடத்தி வந்துள்ளார் என்றும் தெரிய வந்தது. நிஷாத் ஏற்கெனவே இரண்டு முறை வெவ்வேறு பெயர்களில் மருத்துவமனை நடத்தி, சுகாதாரத் துறையால் மருத்துவமனை மூடப்பட்டது. ஆனால் நிஷாத் வேறு பெயரில் அதை மீண்டும் திறந்துள்ளார்.
இதுகுறித்து எஸ்எஸ்பி கவுரவ் குரோவர் கூறும்போது, சுகாதாரத் துறையைச் சேர்ந்த சில ஊழியர்களின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது குண்டர் சட்டம் சேர்க்கப்பட்டு, அவரது சொத்தை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்படும் என்று கூறினார்.
மேலும், பதிவுசெய்யப்பட்ட மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள், நோயியல் மையங்கள் போன்றவற்றைப் பற்றி ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கவும், சட்ட விரோதமான நிறுவனங்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தலைமை மருத்துவ அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.