உள்துறை மந்திரி அமித்ஷாவை கைது செய்ய வேண்டும்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வன்முறை ஏற்படும் என்று கூறிய உள்துறை மந்திரி அமித்ஷாவை கைது செய்ய கோரி பெங்களூரு போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் பரபரப்பு புகாரை அளித்துள்ளது.

Update: 2023-04-27 22:13 GMT

பெங்களூரு:-

சட்டப்படி நடவடிக்கை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 26-ந் தேதி பிரசாரம் செய்தார். அவர் பேசும்போது, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் வன்முறை ஏற்படும் என்று கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பெங்களூருவில் உள்ள ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் அமித்ஷாவுக்கு எதிராக புகார் கொடுத்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறு கோரியுள்ளனர். புகார் அளித்த பிறகு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு கூறியதாவது:-

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

சாதி-மதங்களின் பெயரில் விரோதத்தை பரப்பி மாநிலத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். அவர் மதக்கலவரங்கள் ஏற்படும் என்று கூறி இருக்கிறார். காங்கிரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பி.எப்.ஐ. மீதான தடையை வாபஸ் பெறும் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.

மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலில் முறைகேடுகளை செய்ய முயற்சி செய்கிறார். அவரின் பொய் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர், பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதிக்குமாறு நீண்ட காலமாக கூறி வந்தனர். ஆனாலும் அந்த அமைப்புக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தடை விதிக்கவில்லை.

விரக்தியில் அமித்ஷா

கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெற்றது. இதில் எந்த மதக்கலவரமும் நடைபெறவில்லை. பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்று அவர்கள் உணர்ந்துள்ளதால் விரக்தியில் அமித்ஷா, ஜே.பி.நட்டா போன்ற பா.ஜனதா தலைவர்கள் பேசுகிறார்கள்.

அமித்ஷா இத்தகைய சதியை வேறு மாநிலத்தில் செய்யலாம். ஆனால் கர்நாடகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு சட்ட அறிவு உள்ளது. அமித்ஷாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதுகுறித்து எனக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து நாளை (இன்று) மாலை 4 மணிக்கு விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள அமித்ஷாவுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

மந்திரி சோமண்ணா மீதும் காங்கிரஸ் புகார்

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் மந்திரி சோமண்ணா 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதாவது, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடும் வருணா தொகுதியிலும், சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். சாம்ராஜ்நகரில் சோமண்ணாவை எதிர்த்து ஜனதாதளம்(எஸ்) சார்பில் லிங்காயத் சமூகத்தை மல்லிகார்ஜுனசாமி போட்டியிடுகிறார். சாம்ராஜ்நகரில் தனது சமூகத்தை சேர்ந்தவரையே ஜனதாதளம்(எஸ்) நிறுத்தி உள்ளதால், அவரால் எளிதாக வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மல்லிகார்ஜுன சாமியுடன் மந்திரி சோமண்ணா பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. இதில், சாம்ராஜ்நகர் தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும், வாபஸ் பெற்றால் ரூ.50 லட்சமும், காரும் பரிசாக தருவதாகவும் கூறி உள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் தேர்தலுக்கு முன்பே பா.ஜனதா கட்சி ஆபரேஷன் தாமரையை தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்