டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தில் ஜப்பானிய பெண்ணிடம் வாலிபர்கள் அத்துமீறல்; சமூக வலைதள வீடியோவால் அதிர்ச்சி

டெல்லியில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டத்தின்போது ஒரு ஜப்பான் நாட்டு பெண்ணிடம் வாலிபர்கள் சிலர் அத்துமீறி நடந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-11 21:15 GMT

அத்துமீறல்

தலைநகர் டெல்லியில் நடந்த ஒரு ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, சில வாலிபர்கள் ஒரு வெளிநாட்டு இளம்பெண்ணை பிடித்துவைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக வண்ணப்பொடிகளை பூசினர். அத்துமீறி அவரை சீண்டினர். ஒரு நபர், அந்தப் பெண்ணின் தலையில் முட்டையை அடித்து உடைத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், ஒருவரை அறைந்து தள்ளிவிட்டு அலறியபடி அங்கிருந்து தப்பிச்சென்றார்.

சிறுவன் உள்ளிட்டோர் கைது

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், அது தலைநகரின் பகார்கஞ்ச் பகுதியில் நடைபெற்றிருக்கிறது என்றும், அந்தப் பெண் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி என்றும் கண்டுபிடித்தனர். அவரிடம் அத்துமீறி நடந்த ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

போலீசுக்கு நோட்டீஸ்

இதற்கிடையில் அந்த ஜப்பானிய பெண் நேற்று முன்தினம் வங்காளதேச நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நலமாக இருப்பதாக தனது டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தை தனது கவனத்தில் எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணையம், டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பா.ஜ.க. பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இந்த சம்பவம் வெறுப்பூட்டுவதாகவும், மகளிர் ஆணையத்துக்கு அந்தப் பெண் புகார் அனுப்ப வேண்டும் என்றும் டுவிட்டரில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்