இமாசல பிரதேச சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது

இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணி தொடங்கி நடந்து வருகிறது.

Update: 2022-11-12 02:31 GMT



சிம்லா,


இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தேர்தலில் 412 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது. இவர்களில் 24 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள்.

இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை விட (27 லட்சத்து 37 ஆயிரத்து 845), ஆண் வாக்காளர்கள் அதிகம் ( 28 லட்சத்து 54 ஆயிரத்து 945). இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர். இவர்களுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

ஆனாலும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் 'நீயா, நானா?' என்கிற அளவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜ.க.வுக்காக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த கட்சி 8 லட்சம் பேருக்கு வேலை, பொது சிவில் சட்டம் அமல் என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காக பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு 1 லட்சம் பேருக்கு அரசு வேலை, 300 யூனிட் இலவச மின்சாரம். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை என கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சிக்காக அதன் நிறுவனர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் பிரசாரம் செய்தனர். இங்கு அந்த கட்சி 300 யூனிட் மின்சாரம், 6 லட்சம் பேருக்கு அரசு வேலை, வீடுதோறும் ரேஷன் பொருட்கள் வினியோகம் என வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் 20 அதிருப்தியாளர்கள் தேர்தலில் போட்டியில் உள்ளனர். இதே போன்று காங்கிரஸ் கட்சியிலும் 12 அதிருப்தி வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். எனவே இரு கட்சிகளுக்கும் அதிருப்தியாளர்கள் பெரும் தலைவலியாக மாறி உள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை அங்கு பிரசாரம் ஓய்ந்தது.

முக்கிய வேட்பாளர்களாக முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் (செராஜ்), மாநில காங்கிரஸ் தலைவர் அக்னிஹோத்ரி (ஹரோலி), முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் (சிம்லா ஊரகம்) உள்ளனர். வாக்குப்பதிவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொகுதிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பிற பொருட்கள் போய் சேர்ந்துள்ளன.

இன்று (சனிக்கிழமை) பதிவாகிற வாக்குகள், அடுத்த மாதம் 8-ந்தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். அன்று பிற்பகலில் இமாசல பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்திற்கு வருமா? அல்லது அந்த கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது தெரிய வந்து விடும்.

இதனை முன்னிட்டு வாக்கு செலுத்துவதற்காக காலை முதலே வாக்காளர்கள் வாக்கு சாவடிக்கு மக்கள் வரிசையாக வர தொடங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்