அதிக வரி மற்றும் வேலையின்மை: பொருளாதாரத்தை அழித்த பா.ஜனதா - ராகுல்காந்தி தாக்கு

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பா.ஜனதா அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-18 07:19 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது.

இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. பாக்கெட் உணவுகள் இதில் முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பனீர், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு மற்றும் பிற தானியங்கள், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது.

வெட்டுகத்தி, பேப்பர் கத்தி, பென்சில் ஷார்ப்னர், கரண்டி, முட்கரண்டி, ஸ்கிம்மர், கேக்-சர்வர், எல்.இ.டி. விளக்குகள், மை, வரையும் கருவிகள் போன்ற பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில் உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை பா.ஜனதா அழித்துவருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், தயிர், பன்னீர், அரிசி, கோதுமை, பார்லி, வெல்லம் மற்றும் தேன் போன்ற பொருள்களுக்கு தற்போது எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வகையில் வரைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக நுகர்வுப் பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படாது. தற்போது அதிக வரிகள், ஆனால் வேலையும் இல்லை. ஒருகாலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை தற்போது எப்படி அழிப்பது என்பதே பா.ஜனதாவின் திட்டமாக இருக்கிறது.

இதோடு, 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் மருத்துவமனைகளின் அறைகளுக்கு 5 சதவிகித வரியும், ரூ.1000-க்கு குறைவான உணவக அறைகளுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், எல்இடி விளக்குகள் மற்றும் சாதாரண விளக்குகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்