விவாகரத்துக்கு பின்பு மனைவி கொண்டு வந்த சீதனத்திற்குகணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது
விவாகரத்துக்கு பின்பு திருமணத்தின் போது மனைவி கொண்டு வந்த சீதனதிற்கு கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு
விவாகரத்துக்கு பின்பு திருமணத்தின் போது மனைவி கொண்டு வந்த சீதனதிற்கு கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது என்று கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
ரூ.9 லட்சத்தை கொடுக்க மறுப்பு
பெங்களூருவை சேர்ந்த ஒரு நபருக்கும், பெண்ணுக்கும் திருமணமாகி இருந்தது. அந்த தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஜீவனாம்சம் வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த பெண் தனது திருமணத்தின் போது, கணவருக்கு சீதனமாக ரூ.9 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் பொருட்களை கொடுத்திருந்தார்.
ஆனால் திருமணத்தின் போது கொடுத்த நகை, பணத்தை திரும்ப கொடுக்க முடியாது என்றும், அது தங்களுக்கு தான் சொந்தம் என்றும் அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாடியதாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண், பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
உரிமை கொண்டாட முடியாது
இந்த வழக்கை எதிர்த்து அந்த நபர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது விவாகரத்து பெற்ற பின்பு பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது சரியானது தான். அதே நேரத்தில் விவாகரத்து ஆன பின்பு திருமணத்தின் போது அந்த பெண் தனது பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டு வந்த சீதனத்திற்கு கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது.
எனவே ஜீவனாம்சத்துடன், ரூ.9 லட்சம் ரொக்கம், நகைகள், பிற பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கீழ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி நாகபிரசன்னா தீர்ப்பு கூறி உத்தரவிட்டுள்ளார்.