சீன மந்திரியுடன் கலந்துரையாடல் கைகுலுக்குவதை தவிர்த்த ராஜ்நாத்
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சீன மந்திரி ஜெனரல் லி ஷங்புவிடம், சீனாவின் "தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்து விட்டது" என்று கூறினார்.
புதுடெல்லி
மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு மந்திரிகள் மாநாடு நடைபெற்றது.
இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள தஜகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், சீன ஆகிய நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் டெல்லி வந்துள்ளனர். மாநாட்டிற்கு இடையே, நான்கு நாட்டு மந்திரிகளும் ராஜ்நாத் சிங்குடன் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சந்திப்பு துவங்குவதற்கு முன்னர், தஜகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான் நாட்டு பாதுகாப்பு மந்திரிகலுடன் ராஜ்நாத் சிங் கைகுலுக்கி வரவேற்பு அளித்தார். ஆனால், சீனா பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷங்புவை சந்தித்த போது, கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டு வணக்கம் தெரிவித்தார்.
பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.கிழக்கு லடாக்கில் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலில் சீனா தனது படைகளை விலக்கி பதட்டத்தை தணிக்கும் வரை ஒட்டுமொத்த இருதரப்பு உறவில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று இந்தியா சீனாவுக்கு திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சீன மந்திரி ஜெனரல் லி ஷங்புவிடம், சீனாவின் "தற்போதுள்ள ஒப்பந்தங்களை மீறுவது இருதரப்பு உறவுகளின் முழு அடிப்படையையும் சிதைத்து விட்டது" என்று கூறினார்.
வியாழன் மாலை நடைபெற்ற 55 நிமிட பிரதிநிதிகள் அளவிலான கூட்டத்தின் போது, எல்லையில் உள்ள விலகல் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிமொழிகளின்படி உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட வேண்டும்.
பிறகு லீ ஷங்பு கூறுகையில்,' நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான வளரும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவும், சீனாவும் வேறுபாடுகளை தாண்டி, பொதுவான நலன்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு ராணுவத்தினரிடையே பரஸ்பர நம்பிக்கையை தொடர்ந்து மேம்படுத்த இரு தரப்பினரும் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.
இரு தரப்பு உறவுகள், மற்ற நாடுகளின் வளர்ச்சி ஆகியவற்றை உலகத்தின் நலன் மற்றும் பிராந்திய அமைதி , ஸ்திரத்தன்மைக்காக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் பேசும் போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் போராட வேண்டும். இந்த அமைப்பு வலுப்பெற வேண்டும் என்றால், ஒருங்கிணைந்து போராடுவது அவசியம். பயங்கரவாதிகள் புதிய வழிகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். இந்த அமைப்பை வலுப்படுத்தவும், அமைப்பின் தீர்மானங்களை அமல்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.