பாலக்காட்டில் பலத்த மழை: வீடு இடிந்து விழுந்து இளம்பெண் பலி - கணவர் படுகாயம்

பாலக்காட்டில் பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்தார். மேலும் கணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-09-11 00:51 GMT

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பாலக்காடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் கோங்காடு பகுதியில் வினோத் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த வினோத்தின் மனைவி மல்லி (வயது 28) மீது கட்டிட இடிபாடுகள் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். வினோத்துக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கணவன், மனைவி 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மல்லி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து வினோத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த மழை காரணமாக பாலக்காடு-பொள்ளாச்சி சாலை பள்ளத்தேரி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்ற லாரி மீது மண்சரிந்து விழுந்தது.

இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், சாலையில் மண் விழுந்ததால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டதோடு, மண் சரிவை அகற்றும் பணி நடந்தது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்