சிவமொக்கா, சிக்கமகளூருவில் கனமழை கொட்டியது

சிவமொக்கா, சிக்கமகளூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

Update: 2023-07-04 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா, சிக்கமகளூருவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் இன்னும் சரியான மழை பொழிவு இல்லாமல் உள்ளது. மாநிலத்தில் கடலோர மாவட்டங்களிலும், வடகர்நாடக மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை எப்போது பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 3-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மலை மாவட்டங்களான சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன் ஆகிய நகரங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிவமொக்காவில் நேற்று காலை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் சிவமொக்கா டவுன் உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி- மின்னலுடன் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் டவுன் பகுதியில் சாக்கடை கால்வாய் நிரம்பி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மரங்கள் முறிந்து விழுந்தன

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோரம் நின்ற மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்கம்பங்கள், மரங்களை அகற்றும் பணியில் மின்சாரத்துறை ஊழியர்கள், பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். கனமழையால் சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஜோக் கார்கல், லிங்கனமக்கி ஆகிய நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது.

அணைகளின் நீர்மட்டம்

சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 110.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் ஜோக் நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகிறார்கள். சிவமொக்கா மாவட்டத்தில் அதிகபட்சமாக சாகர் தாலுகாவில் 33.60 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக பத்ராவதியில் 4.20 மில்லி மீட்டரும், ஒசநகர் தாலுகாவில் 22.30 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

பத்ரா அணையின் நீர்மட்டம் 136.10 அடி உள்ளது. மேலும் நீர்வரத்து வினாடிக்கு 59 கனஅடியாகவும், தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 209 கன அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு அணையின் நீர்மட்ட அளவு 154.30 அடியாக இருந்தது. துங்கா அணையின் நீர்மட்டம் (கடல் மட்டத்தில் இருந்து) 586.12 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்கள் பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சிக்கமகளூருவில் மழை

சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி, கலசா ஆகிய பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கலசத்தாலுகா-சன்னஹடலு கிராமத்திற்கு செல்லும் சாலையில் தேக்கு மரம் ஒன்று விழுந்தது. அந்த மரத்தை அப்பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் வெட்டி அகற்றினர். இதனால் அந்தப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன. 

Tags:    

மேலும் செய்திகள்