வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை; டெல்லி யமுனை ஆற்றில் அபாய அளவை கடந்தது நீர்மட்டம்

டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் இமாசல பிரதேசத்தில் கனமழை பரவலாக பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-07-23 04:14 GMT

புதுடெல்லி,

வட இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரங்களின் சாலை முழுவதும் பல இடங்களில் வெள்ளக்காடாக உள்ளது. வீடுகள் மற்றும் கடைகள் பெருமளவில் கனமழை மற்றும் மேகவெடிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளன.

குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், ஆறுகளில் அபாய அளவை கடந்து நீர்மட்டம் செல்கிறது.

மராட்டியத்தில், மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் தீவிர கனமழை பெய்து உள்ளது. சாந்தாகுரூசில் 204 மி.மீ. மழை பெய்து உள்ளது. இது 9 ஆண்டுகளில் ஜூலையில், ஒரே நாளில் பெய்த 3-வது அதிக மழைப்பொழிவாகும்.

தெலுங்கானாவில், 5-வது நாளாக நேற்று பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதேபோன்று, ஆந்திர பிரதேசத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பல மாவட்டங்களில் தொடர் கனமழையால், ஏரிகள், குளங்கள் மற்றும் பிற நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளநீர் மீண்டும் இன்று காலை 205.81 மீட்டர் அளவுக்கு உயர்ந்து அபாய அளவை கடந்து உள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இமாசல பிரதேசத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால், 3 பேர் காணாமல் போயுள்ளனர். வாகனங்கள் பல நீரில் அடித்து செல்லப்பட்டன. மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளும் கனமழையால் தொடர்ந்து வருகின்றன. 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் கனமழையால் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. உத்தர்காசியில் 50 கட்டிடங்கள் பாதிப்படைந்ததுடன், 50 சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 40 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்