சிக்கமகளூருவில் கனமழை 20 கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வியாபாரிகள் பரிதவிப்பு

சிக்கமகளூருவில் பெய்த கனமழையில் 20 கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் வியாபாரிகள் பரிதவித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பயிரிட்டு இருந்த விவசாய பயிர்களும் நாசமானது.

Update: 2022-09-02 15:44 GMT

சிக்கமகளூரு;


கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே, கொப்பா, சிருங்கேரி, அஜ்ஜாம்புரா, என்.ஆர்.புரா ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

மூடிகெரே டவுன் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாலையோரம் இருந்த கடைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் 20 கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகள் மிகவும் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

இதேபோல சங்கர்புராவில் இருந்து கல்யாணநகர் செல்லும் சாலையில் பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அஜ்ஜாம்புராவில் உள்ள முகலி குளத்தில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நீர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் பாய்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்கள் நாசமானது. மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்