அரியானா: பதற்றமான பகுதிகளில் துணை ராணுவ படைகளை ஈடுபடுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் போராட்ட பேரணிகளின்போது வெறுப்பு பேச்சு, வன்முறை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-08-02 10:24 GMT

புதுடெல்லி:

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.

அரியானா வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.  இதனையடுத்து சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குர்கானின் பாட்ஷாபூரில் இன்று காலை சிறப்பு அதிரடி படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பரிதாபாத், பல்வால் மற்றும் குர்கான் மாவட்டத்தில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

திங்கள்கிழமை நடந்த மோதலின் பின்னணியில் "சதி" இருப்பதாக சந்தேகிக்கிறேன். இந்த சம்பவம் "துரதிர்ஷ்டவசமானது" வன்முறைக்கு பின்னால் ஒரு பெரிய சதி இருக்கிறது என்று கூறினார்.

அரியானா மாநிலம் நூ வில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் நடத்தும் பேரணியின்போது வெறுப்பு பேச்சுகளோ, வன்முறைகளோ நடைபெறாமல் பார்த்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, கூடுதல் போலீஸ் அல்லது துணை ராணுவ படைகளை ஈடுபடுத்தவும், முக்கியமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்