பீகாரில் தேர்தல் பணியில் மாரடைப்பு; 2 அதிகாரிகள் மரணம்

பீகாரின், அராரியா மற்றும் சுப்பால் ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் 2 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர்.;

Update:2024-05-08 04:45 IST

பாட்னா,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இவற்றில் 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 3-வது கட்ட தேர்தல் நேற்று நடந்தது.

இதில், பீகாரின் அராரியா, சுப்பால், ஜன்ஜார்பூர், மாதேபுரா மற்றும் ககாரியா ஆகிய 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 60 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. பீகாரில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, 61.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த தேர்தலை விட இந்த முறை பதிவான வாக்குகள் ஒரு சதவீதம் குறைவாகும்.

தேர்தலில், 9 மையங்களில் சில உள்ளூர் விசயங்களுக்காக வாக்காளர்கள் வாக்கு பதிவை புறக்கணித்தனர் என தலைமை தேர்த்ல் அதிகாரி எச்.ஆர். சீனிவாசா கூறியுள்ளார்.

இந்த நிலையில், அராரியா மற்றும் சுப்பால் ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் 2 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர்.

இவர்களில் மகேந்திர ஷா என்பவர் காவலராக உள்ளார். சைலேந்திர குமார் என்ற அதிகாரி சுப்பால் தொகுதியில் பணியில் இருந்தபோது, உயிரிழந்து உள்ளார். நேற்று ஒரே நாளில் ரூ.80 லட்சம் பணம் மற்றும் ரூ.3.75 கோடி மதிப்பிலான 1.40 லட்சம் லிட்டர் மதுபானம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்