விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
வக்கீல் விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வக்கீல் அன்னா மேத்யூ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் ராஜீவ் ராமச்சந்திரன், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று காலை ஆஜராகி முறையிட்டார்.
அந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் பிற்பகலில் முறையிடப்பட்டது.
முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் நாளை (இன்று) விசாரணைக்கு பட்டியலிடப்படும். வக்கீல் விக்டோரியா கவுரி குறித்த புகார்களை கொலிஜீயம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார்.