சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்

2 சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார்.

Update: 2022-11-04 23:43 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிா்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:-

பணி இடமாற்றல்

துமகூருவில், அரசு ஆஸ்பத்திரி டாக்டரின் அலட்சியத்தால் 2 சிசுக்களுடன் கர்ப்பிணி இறந்துள்ளார். இதற்கு காரணமான டாக்டர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். கொரோனா பரவல் காலத்தில் இருந்து சுகாதாரத்துறையின் பொறுப்பற்ற செயல்பாடுகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் சுகாதாரத்துறை மந்திரியாக சுதாகர் நீடித்தால், இத்தகைய சம்பவங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.

பணி நியமனம், பணி இடமாற்றல் போன்ற அனைத்தும் பணத்தின் மூலம் மட்டுமே நடைபெறுவதால் அதிகாரிகள், மந்திரியின் பேச்சை மதிப்பது இல்லை. தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மந்திரிக்கு இல்லை. பெங்களூருவில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து உயிரிழக்கிறார்கள். மற்றொருபுறம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் இறக்கிறார்கள்.

கொல்லும் அரசு

40 சதவீத கமிஷன் வழங்க முடியாமல் ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொள்கிறார். இந்த பா.ஜனதா அரசு மக்களை காப்பாற்றும் அரசாக இல்லாமல், கொல்லும் அரசாக உள்ளது.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்