விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
பெங்களூரு: பெங்களூரு கங்கொண்டனஹள்ளியை சேர்ந்தவர் தீபக் (வயது 26). இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் நைஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரமாக நின்ற கேன்டர் லாரி மீது மோதியது. விபத்து பற்றி அறிந்ததும் அங்கு சென்ற போலீசார் தீபக்கை மீட்டு ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் தீபக் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி தீபக்கின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டு தீபக்கின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் தீபக் இறந்த சோகமான நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் தீபக்கின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள், தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டது. மகன் இறந்த நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த தீபக்கின் பெற்றோரை டாக்டர்கள் வெகுவாக பாராட்டினர்.