கேரளாவில் குரங்கு அம்மைக்கு ஒருவர் பலி: உயிர் பறிக்கும் நோய் கிடையாது - சுகாதாரத்துறை மந்திரி

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-01 15:38 GMT

திருவனந்தபுரம்,

குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 3, டெல்லி மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கேரளாவில் முதலில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. அதில், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும்.

குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். நோய்க்கான அறிகுறி இருந்தால் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.' என அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா, கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரசு எமிரேட்சில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த நடுத்தர நபருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தொற்று பாதித்த நபர் கடந்த ஜூலை 30-ம தேதியே சிகிச்சை பலனின்றி பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர்,

'வெளிநாட்டில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. சோர்வு மற்றும் மூளை அழற்சி காரணாமாகவே அவர் திருச்சூரில் சிகிச்சை பெற்று இருக்கிறார். குரங்கு அம்மை என்பது உயிர் பறிக்கும் நோய் கிடையாது.

சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளோம். உயிரிழந்த இளைஞருக்கு தொடர்புடையவர்கள் விபரம், அவர் பயணித்த இடங்களில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்