பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த 5 போலீசார் பணியிட மாற்றம்

சட்டசபை தேர்தலையொட்டி இரியூர் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த 5 போலீசார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-04-14 18:45 GMT

சிக்கமகளூரு-

சட்டசபை தேர்தலையொட்டி இரியூர் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த 5 போலீசார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே) 10-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 13-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. மனு தாக்கலுக்கு கடைசி நாள் வருகிற 20-ந்தேதி ஆகும். மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், போலீசார் வாகன சோதனை செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பே ஜனதா தளம்(எஸ்) கட்சி 93 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் 2 கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தநிலையில் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பிலும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சித்ரதுர்கா மாவட்டத்திலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்)ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிறுவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போலீசார் தேர்தல் பிரசாரம்

இந்தநிலையில் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் சட்டசபை தொகுதி பா.ஜனதா கட்சி வேட்பாளராக பூர்ணிமா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் இரியூர் சட்டசபை தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் பிரசாரம் செய்தனர். மேலும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதில் பா.ஜனதா கட்சி வேட்பாளர் பூர்ணிமாவுக்கு ஆதரவாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 5 போலீஸ்காரர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈரலிங்கேஸ்வரா என்பவர் மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரியும், கலெக்டருமான திவ்யா பிரபுவிடம் புகார் அளித்தார்.

பணி இடமாற்றம்

புகாரின் பேரில் மாவட்ட தேர்தல் அதிகாரி திவ்யா பிரபு உத்தரவின் பேரில் சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம், சித்ரதுர்கா டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் திம்மராயப்பா, முனீஸ் மற்றும் சித்ரதுர்கா புறநகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களான திம்மேஸ், பீர்தேஷ், சிவமூர்த்தி ஆகியோர் என மொத்தம் 5 போலீஸ்காரர்களையும் பணி இடமாற்றம் செய்துள்ளார். இதுபோன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்