நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் சம்பவம்: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை; 3 பேர் விடுதலை - கோர்ட்டு உத்தரவு

ஹத்ராஸ் வழக்கில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கோர்ட்டு தீர்ப்பளித்து வழக்கில் இருந்து 3 பேரை விடுதலை செய்துள்ளது.;

Update:2023-03-05 18:21 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கோர்ட்டு தீர்ப்பளித்து வழக்கில் இருந்து 3 பேரை விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முழு விவரம்:

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் 2020 செப்டம்பர் 14-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலித் சமுகத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணை மாற்று சமுகத்தை சேர்ந்த 4 பேர் கடத்தில் வயல்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதேவேளை, அந்த இளம்பெண் மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் முதுகு, கால் எலும்புகள் முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு மிகவும் கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருந்தார்.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த பெண் உ.பி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்கஞ்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் செப்டம்பர் 29ம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதில், மாற்று சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் தங்கள் மகளை விவசாய நிலத்திற்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதேவேளை, டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அந்த பெண்ணின் உடலை கிராமத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகள் உறவினர்களின் அனுமதியின்றி உடலை நள்ளிரவு 1 மணியளவில் தீ வைத்து எரித்து தகனம் செய்தனர். உடலை தங்களிடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டபோதும் அதற்கு மறுப்பு தெரிவித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இளம்பெண்ணின் உடலை அதிகாரிகள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வெளியாகி நாட்டையே அதிரச்செய்தன.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் மாற்று சமுகத்தை சேர்ந்த சந்தீப் (வயது 20), ரவி (வயது 35), லவ் குஷ் (வயது 23), ராமு (வயது 26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஹத்ராஸ் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.

ஹத்ராஸ் வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தீர்ப்பளித்த கோர்ட்டு குற்றஞ்சாட்டப்பட்ட ரவி (வயது 35), லவ் குஷ் (வயது 23), ராமு (வயது 26) ஆகிய 3 பேரை விடுதலை செய்தது.

அதேவேளை, இந்த வழக்கில் சந்தீப் (வயது 20) குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்து அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திர்லோக்பால் சிங் வழங்கிய தீர்ப்பு விவரம்:-

இந்த ஒட்டுமொத்த வழக்கும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுவதால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சந்திக்க வந்த பிறரால் துன்புறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட இளம்பெண் (உயிரிழந்த இளம்பெண்) குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருக்கலாம்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடத்து 8 நாட்களுக்கு பின்னும் பேசியதால் முக்கிய குற்றவாளி சந்திப்பின் நோக்கம் அந்த இளம்பெண்ணை கொலை செய்வதாக இருந்திருக்காது. ஆகையால், குற்றவாளி கொலை குற்றத்திற்கான தண்டனை பெறமுடியாது மாறாக கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் பிரிவில் தண்டனை வழக்கப்படும் என்று தெரிவித்தார்.

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதற்கு எந்த வித மருத்துவ ஆதாரமும் இல்லை. மருத்துவ பரிசோதனைகளில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அந்த 4 பேரின் பெயர்களையும் போலீசிடமோ, ஊடகத்திடமோ சம்பவம் நடந்த அன்றே தெரிவித்திருக்கலாம். ஆனால், அந்த பெண் அவ்வாறு செய்யவில்லை.

சம்பவம் நடந்து 5 நாட்கள் கழித்தும் பெண் கான்ஸ்டபிள் ரேஷ்மியிடம் அவர் அளித்த வாக்குமூலத்திலும் சந்தீப்பின் பெயரை மட்டுமே பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளாரே தவிர கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எதையும் கூறவில்லை. ஆகையால், இந்த வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என்று கருத்த முடியாது. மேலும், அதன் பின் தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தாசில்தாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறி வாக்குமூலத்தை நம்பகத்தன்மைகொண்டதாக ஏற்றுக்கொள்ளமுடியாது.

அதேவேளை குற்றவாளி சந்தீப் 2020 செப்டம்பர் 14-ம் தேதி வயல்வெளியில் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார் பின்னர் செப்டம்பர் 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

கழுத்து பகுதியில் ஏற்பட்ட அடியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்பது உறுதியானபோதும் சம்பவம் நடந்து 8 நாட்கள் பாதிக்கப்பட்ட பெண் பேசியுள்ளார். ஆகையால், குற்றவாளி சந்தீப்பின் நோக்கம் அந்த பெண்ணை கொலை செய்வதாக இருக்கம் என்று கூறமுடியாது. உயிரிழந்த பெண்ணின் காயங்களின் தன்மையை பார்க்கும்போது இது ஒரு நபரால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கும், குற்றவாளியின் குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கும், குற்றவாளி சந்திப்பிற்கும் இடையே காதல் இருந்து வந்ததால் பெண்ணின் குடும்பத்தினர் குற்றவாளியின் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி சந்தீப்பிற்கு 50 ஆயிரம் அபராதமும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அபராத தொகையில் 40 ஆயிரம் ரூபாயை உயிரிழந்த பெண்ணின் தாய்க்கு வழங்க வேண்டும் என கூறி தீர்ப்பளித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்