அரியானா பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல் ஆரம்பம்.. மந்திரி, எம்.எல்.ஏ. விலகல்
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த மந்திரி ரஞ்சித் சவுதாலா, எம்.எல்.ஏ. லக்ஷமன் தாஸ் நபா ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.;
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் அக்டோபர் மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக களப்பணியில் ஈடுபட்டுள்ளன. ஆளும் பா.ஜ.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், 67 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த வேட்பாளர் பட்டியல் வெளியானபின் உட்கட்சி பூசல் ஆரம்பமாகி உள்ளது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த மந்திரி ரஞ்சித் சவுதாலா, எம்.எல்.ஏ. லக்ஷமன் தாஸ் நபா, கட்சியின் ஓ.பி.சி. பிரிவு தலைவர் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர்.
முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனான ரஞ்சித் சிங் சவுதாலா, மாநில எரிசக்தி மற்றும் சிறைத்துறை மந்திரியாக இருந்தார். ராணியா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதால், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தார். இதனால் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். இனி தனது தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து விலகிய நாபா, டெல்லி சென்று அரியானா முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடாவை நேரில் சந்தித்தார். அப்போது, தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இணைந்தார்.
இவர்கள் தவிர, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத மேலும் சில எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.