அரியானா: பெல்ட் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து; 20 பேர் காயம்
அரியானாவில் பெல்ட் தொழிற்சாலையில் தீ விபத்தில் சிக்கி கொண்ட நபர்களில், ராய் தொழிற்பேட்டை பகுதியின் தலைவரும் அடங்குவார்.;
சோனிபத்,
அரியானாவின் சோனிபத் மாவட்டத்தில் ராய் தொழிற்பேட்டை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில், பெல்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 15 முதல் 20 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்த நிலையில், தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தீ மளமளவென பரவியது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இந்த தீ விபத்தில் சிக்கி கொண்ட நபர்களில், ராய் தொழிற்பேட்டை பகுதியின் தலைவரும் அடங்குவார். உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை.