குடும்பத்தினரை மூளைச்சலவை செய்து மதம் மாற்றிவிட்டனர் - விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபர்

மனைவி, மகன், மகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றிவிட்டனர் என கூறி நபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Update: 2022-08-30 07:15 GMT

காந்திநகர்,

மனைவி, குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றிவிட்டனர் என கூறி நபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விஷம் குடித்த நபரின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தரப்பில் கூறியுள்ளதாவது;

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் தீசா தாலுகா மல்ஹடா கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ் சோலங்கி. இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

இதனிடையே, சோலங்கியின் மகள் கல்லூரி படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் படித்த அஜூஸ் ஷேக் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்துள்ளனர்.

தான் அஜூஸ் ஷேக்கை காதலிப்பதாக சோலங்கியிடம் அவரது மகள் தெரிவித்துள்ளார். இந்து மதத்தை சேர்ந்த ஹரிஸ் சோலங்கி கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் சோலங்கி மற்றும் அவரது உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சோலங்கியின் மனைவி தனது மகளின் காதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சோலங்கியின் மகனும் தனது சகோதரியின் காதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அஜூஸ் ஷேக் அவ்வப்போது சோலங்கியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

நாட்கள் செல்லச்செல்ல சோலங்கியின் மனைவி, மகள், மகன் இஸ்லாமிய மத வழிபாடு நடைமுறை பின்பற்றத்தொடங்கினர். வீட்டில் இஸ்லாமிய மத வழிபாடு செய்துள்ளனர். இதற்கு குடும்ப உறுப்பினர்கள் எதிர்பு தெரிவித்ததால் 3 பேரும் சோலங்கியை விட்டு பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் 3 பேருக்கு அஜூஸ் ஷேக்கின் குடும்பத்தினர் ஆதரவு அளித்துள்ளனர். பின்னர், 3 பேரும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர். ஷேக்கின் குடும்பத்தின் ஆதரவுடன் 3 பேரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். குடும்பத்தினர் 3 பேரும் தனியாக சென்ற நிலையில் அவர்கள் எங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பது குறித்து சோலங்கி தேடி வந்தார்.

இந்நிலையில், மனைவி, மகள், மகனை தன்னிடம் ஒப்படைத்துவிடும்படி அஜூஸ் ஷேக்கின் குடும்பத்திடம் சோலங்கி முறையிட்டுள்ளார். அவர்களின் இருப்பிடம் எங்கு உள்ளது எனவும் சோலங்கி கேட்டுள்ளார்.

மனைவி, மகள், மகன் எங்கு வாழ்கிறார்கள் என தெரிவிக்கவேண்டுமானால் 25 லட்ச ரூபாய் தரவேண்டும் எனவும், இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் எனவும் சோலங்கியிடம் அஜூஸ் ஷேக்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சோலங்கி நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்த சோலங்கியின் சட்டைப்பையில் இருந்து கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு அஜூஸ் ஷேக், ஷோஹில் ஷேக் அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்