குஜராத் தேர்தல்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பதில் பால விபத்தில் பலரை மீட்டவருக்கு சீட் ஒதுக்கீடு
குஜராத் சட்டசபை தேர்தலில் நடப்பு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பதிலாக, பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சீட் அளிக்கப்பட்டு உள்ளது.
மோர்பி,
குஜராத்தில் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நூறாண்டு பழமையான தொங்கு பாலம் ஒன்று புனரமைக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், கடந்த அக்டோபர் 30-ந்தேதி பாலம் திறந்து நான்கே நாட்களில் அது இடிந்து விழுந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில், நிலைமையின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு, குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கில் 7 நாட்களில் பதிலளிக்கும்படி உள்துறை உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குஜராத் தொங்கு பால விபத்தில் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கடந்த 7-ந்தேதி ஐகோர்ட்டு தெரிவித்தது.
இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து, 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவானது. இதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயார் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பா.ஜ.க. தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து தேர்தலில் 160 தொகுதிக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது. இதனை அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் துஷ்யந்த் குமார் கவுதம் வெளியிட்டு உள்ளார்.
இந்த தேர்தலில் குஜராத் முதல்-மந்திரியான பூபேந்திர பட்டேல் கத்லோடியா தொகுதியில் இருந்தும், குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சாங்கவி மஜூரா தொகுதியில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து பா.ஜ.க. வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், குஜராத் தேர்தலில் மோர்பி தொகுதியின் நடப்பு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக உள்ள பிரிஜேஷ் மெர்ஜாவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு பதிலாக, குஜராத் தொங்கு பால விபத்தின்போது, ஆற்றில் குதித்து பலரை காப்பாற்றிய முன்னாள் எம்.எல்.ஏ.வான கந்திலால் அம்ருதியா (வயது 60) சீட் வழங்கப்பட்டு உள்ளது.
அவர் பால விபத்தின்போது, உயிர்காப்பு உபகரணத்தின் உதவியுடன் ஆற்றில் குதித்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட பல வீடியோக்கள் வெளிவந்து உள்ளன. இதனை தொடர்ந்து அவரது தைரியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.