குஜராத் உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு உயர்வு.. சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
இடஒதுக்கீட்டை இன்னும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.;
பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) தற்போது 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதை 27 சதவீதமாக உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்தது.
நீதிபதி ஜவேரி கமிஷன் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27 சதவீதமாக உயர்த்தப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது, இடஒதுக்கீட்டை இன்னும் அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியதுடன், சட்டசபை நிகழ்வை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.