நாளை விண்ணில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் - திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு
'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டின் மாதிரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
திருப்பதி,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட் மூலமாக 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 27½ மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்கியது.
இதனிடையே இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்தனர். ஒவ்வொரு முறை ராக்கெட் ஏவப்படும் போதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதிக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டின் மாதிரியுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.