சொத்துக்காக பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்

சொத்தில் பங்குக் கேட்டு ராஜம்மாவிடம் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.;

Update:2024-04-08 09:51 IST

திருப்பதி,

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூர் மண்டலம் அடவி கொடியம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜம்மா. இவரின் கணவர் ஆறுமுகம், ஏற்கனவே இறந்து விட்டார். அவருக்கு 2 மகன்கள் உண்டு. மூத்த மகன் முனுசாமிரெட்டி, இளைய மகன் கிருஷ்ணாரெட்டி. முனுசாமிரெட்டி கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

ராஜம்மாவுக்கு சொந்தமாக 1.48 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதை, முனுசாமிரெட்டியின் மகன் ஹரிகிருஷ்ணா பராமரித்து வந்தார். ராஜம்மா தனது பெயரில் இருந்த நிலத்தில் ஒரு ஏக்கரை பேரன் ஹரிகிருஷ்ணா பெயரில் எழுதி வைத்தார்.

அன்று முதல் இளையமகன் கிருஷ்ணாரெட்டி, இளைய மருமகள் கவுரி ஆகியோர் சொத்தில் பங்குக் கேட்டு ராஜம்மாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர். கிருஷ்ணாரெட்டி தன்னுடைய அண்ணன் மகன் ஹரிகிருஷ்ணாவுக்கு போன் செய்து, சொத்தில் பாதி பங்குத் தராவிட்டால் உன்னை கொன்று விடுவேன், என மிரட்டல் விடுத்ததாக, கூறப்படுகிறது. இதுகுறித்து ஹரிகிருஷ்ணா, தாயார் தேவிகா ஆகியோர் பிச்சாட்டூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜம்மா வீட்டில் தனியாக இருந்தார். இளைய மகன் கிருஷ்ணாரெட்டி, இளைய மருமகள் கவுரி, பேரன்கள் புருஷோத்தமன், இளங்கோவன் ஆகியோர் சேர்ந்து ராஜம்மாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ராஜம்மாவின் பேரன் இளங்கோவன் (வயது 30) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

நாகலாபுரம் மண்டலம் பைட்டகொடியம்பேடு கிராமத்தில் பதுங்கி இருந்த இளங்கோவனை பிச்சாட்டூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், தனது பாட்டியான ராஜம்மாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துக்காக பாட்டியை பேரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்