சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்திய மத்திய அரசு..!!
நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம்வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.;
புதுடெல்லி,
அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒருதடவை, மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.
அதன்படி, நடப்பு நிதி ஆண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.
3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி, 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயருகிறது. இது, 0.2 சதவீத உயர்வு ஆகும். விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் இருந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.4 சதவீதம் உயர்த்தி உள்ளது. 3 தவணைகளாக இவை உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப முதலீட்டுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
இதற்கிடையே, கடன் வாங்கும் இலக்கு அளவை மத்திய அரசு குறைத்துள்ளது.
நடப்பு நிதிஆண்டில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரூ.10 ஆயிரம் கோடியை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் நேற்று அறிவித்தது.
அதன்படி, நடப்பு நிதிஆண்டின் இரண்டாவது பாதியான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்துக்கு ரூ.5 லட்சத்து 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப்படும் என்று கூறியுள்ளது. இதில், கடன் பத்திரங்கள் மூலமாக ரூ.16 ஆயிரம் கோடி திரட்டப்படுகிறது.
வரி வசூல் அதிகரிப்பு
மொத்த நேரடி வரி வசூல், 30 சதவீதம் அதிகரித்து, ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதனால், கடன் வாங்கும் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது.
ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்குவது நீட்டிக்கப்பட்டதற்கு மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.