தெலுங்கானா அரசுக்கு அவதூறு ஏற்படுத்த கவர்னர் முடிவு: எம்.எல்.சி. கவிதா

தெலுங்கானா அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் பணிக்கான அரசியல் களம் ஆக கவர்னர் அலுவலகம் மாறியுள்ளது என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் எம்.எல்.சி. கவிதா இன்று கூறியுள்ளார்.

Update: 2022-09-08 16:22 GMT

ஐதராபாத்,



தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுனர் மாளிகையில், தெலுங்கானா மக்களுக்கான சேவையில் 4-வது ஆண்டு தொடக்கம் என்ற தலைப்பில் இன்று பேசினார். அவர் பேசும்போது, தேசிய கொடியை ஏற்ற கவர்னருக்கு அனுமதி மறுக்கப்பட்டது உண்மையில் மனவேதனை அடைய செய்தது என கூறினார்.

கவர்னர் உரை மற்றும் நாட்டின் மூவர்ண கொடியை குடியரசு தினத்தன்று ஏற்ற எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கூட, நான் செல்லும் இடங்களில் எல்லாம் அரசின் மரபுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒரு பெண் கவர்னரை எப்படி பாரபட்சமுடன் நடத்தினர் என்று மாநிலத்தின் வரலாறு பேசும். கவர்னர் பதவி மதிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நான் மாவட்டங்களுக்கு செல்லும்போது, போலீஸ் சூப்பிரெண்டுகள், கலெக்டர்கள் வருவதில்லை. மரபுமுறை பின்பற்றப்படுவதுமில்லை. யாரிடம் இருந்து அவர்கள் அறிவுறுத்தல்களை பெறுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை.

அவர்கள் வரவில்லை என்றால், அதற்காக நான் கவலைப்பட போவதில்லை என்றும் அவர் வேதனையுடன் பேசியுள்ளார். தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அரசின் கீழ் கவர்னரின் அலுவலகம் அவமதிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியின் எம்.எல்.சி. கவிதா இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தெலுங்கானா கவர்னர் அலுவலம், ஓர் அரசியல் களம் ஆக மாறியுள்ளது.

அது, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் காருவுக்கும் அவதூறு ஏற்படுத்தும் தீர்மானத்துடன் உள்ளது. பா.ஜ.க.வின் அவதூறு பிரசாரங்களால் தெலுங்கானா மக்களை ஏமாற்ற முடியவில்லை என அவர்கள் உணர்ந்த தருணத்தில், கவுரவத்திற்குரிய கவர்னரின் இந்த பேச்சுகள் வெளிவந்துள்ளன என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்