2 புதிய தேர்தல் கமிஷனர்கள் 15-ந் தேதிக்குள் நியமனம்: விரைவில் கூடுகிறது பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் 2 காலியிடங்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஆக்கி இருந்தன.;
புதுடெல்லி,
தேர்தல் கமிஷனில், தலைமை தேர்தல் கமிஷனர், 2 தேர்தல் கமிஷனர்கள் பணியிடங்கள் உள்ளன. தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே, 65 வயதை எட்டியதால் கடந்த மாதம் 14-ந் தேதி ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனராக இருந்த அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அருண் கோயல் பதவிக்காலம், 2027-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதிவரை இருக்கிறது. அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை தேர்தல் கமிஷனராக பதவி உயர்வு பெற இருந்தார். அதற்குள் ராஜினாமா செய்து விட்டார். அதனால் தற்போது தேர்தல் கமிஷனில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் மட்டுமே இருக்கிறார். 2 தேர்தல் கமிஷனர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் 2 காலியிடங்கள் இருப்பதை எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஆக்கின.
இந்நிலையில், மார்ச் 15-ந் தேதிக்குள் 2 புதிய தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
புதிதாக நிறைவேற்றப்பட்ட தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டப்படி, மத்திய சட்ட மந்திரி அர்ஜுன்ராம் மேக்வால் தலைமையிலான குழு, 2 காலியிடங்களுக்கு தலா 5 அதிகாரிகள் கொண்ட 2 உத்தேச பட்டியலை தயாரிக்கும். அந்த பட்டியலை பிரதமர் மோடி, மத்திய மந்திரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழுவிடம் சமர்ப்பிக்கும். தேர்வுக்குழு, வருகிற 13 அல்லது 14-ந் தேதி தனது வசதிக்கேற்ப கூடும். அப்போது, உத்தேச பட்டியலில் இருந்து 2 புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுத்து ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும். அவர்களை ஜனாதிபதி 15-ந் தேதிக்குள் நியமிப்பார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.