சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கலபுரகி:
தேர்வு முறைகேடு
கர்நாடகத்தில் 545 பணிகளுக்கு நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்து இருந்தது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தகுமார், வைத்யநாத் ரேவூர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதியவர்கள் என 80-க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் கூட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ருத்பாலின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் துமகூருவில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி கலபுரகி சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. இந்த முறைகேட்டில் கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா கர்தாலா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வரும் சங்கரப்பா பசப்பா அனுமகொண்டா (வயது 32) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
ஆசிரியர் கைது
அதாவது இந்த வழக்கில் கைதாகி உள்ள காங்கிரஸ் பிரமுகர் ஆர்.டி.பாட்டீலின் தீவிர ஆதரவாளரான சங்கரப்பா விஜயாப்புராவை சேர்ந்த பிரதார் என்பவரிடம் இருந்து ரூ.30 லட்சம் வாங்கி கொண்டு தேர்வில் முறைகேடு செய்ய உதவியதும் தெரியவந்த்து. அதாவது துமகூருவில் உள்ள மையத்தில் தேர்வு எழுதிய பிரதாருக்கு புளூடூத் மூலம் கலபுரகியில் இருந்து கேள்விகளுக்கு பதில்களை அளித்தது தெரியவந்தது.
இதனால் சங்கரப்பாவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவானார். இந்த நிலையில் ஜேவர்கி தாலுகா குரனல்லியில் வைத்து சங்கரப்பாவை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் ஜீப்பில் துமகூருவுக்கு அழைத்து வந்து துமகூரு சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர்.