பாடகர் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை -மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா விமான நிலையத்தில் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படவுள்ளது.

Update: 2022-06-01 06:54 GMT

Image courtesy: Instagram

கொல்கத்தா,

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (அவருக்கு வயது 53), கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் என மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று மதியம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மந்திரி மம்தா பானர்ஜி தற்போது கொல்கத்தாவில் இல்லை. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் வேறு இடத்துக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கால நிலை விமானம் பறப்பதற்கு ஏதுவாக இருந்தால் நானும் விமான நிலையத்தில் அரசு மரியாதை வழங்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்