50 தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள்
கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் 50 தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவை வருகிற 23-ந் தேதி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் நகரசபை கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்
தூய்மை பணியாளர்கள்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபை தூய்மை பணியாளர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வீடு இல்லாதவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு நகரசபை நிர்வாகம் வீடுகள் கட்டித்தர முன்வந்தது.
அதற்காக சூரப்பள்ளியில் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் மொத்தம் 250 வீடுகளை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது 50 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நகரசபை வளாகத்தில் நடைபெற்றது.
வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
கூட்டத்திற்கு பின் நகரசபை கமிஷனர் பவன் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளி்கையில் கூறியதாவது:-
கர்நாடகாவில் முதன் முறையாக கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந் தேதி தூய்மை பணியாளர்கள் தினத்தன்று முதல் கட்டமாக 50 தொழிலாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
இவ்வாறு பவன் குமார் கூறினார்.