அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சீனிவாஸ்பூர் போக்குவரத்து பணிமனையில் வேலை பார்த்து வந்த அரசு பஸ் டிரைவர் அதிகாரிகள் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-22 21:42 GMT

கோலார் தங்கவயல்:-

அரசு பஸ் டிரைவர்

கோலார் மாவட்டம், சீனிவாஸ்பூர் தாலுகாவில் போக்குவரத்து துணை பணிமனை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இயக்கப்படும் பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டராக பணியாற்றி வருபவர் சோமாச்சாரியா (வயது 50). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் இவர் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் சரியாக பணியாற்ற முடியாமல் போனது. இவரது நிலையை பார்த்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகள், சீனிவாஸ்பூர் தாலுகாவில் உள்ள முக்கிய போக்குவரத்து பணிமனைக்கு மாற்றினர்.

அங்கு சோமாச்சாரியால் சரியாக பணியாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயர் அதிகாரிகள் அவருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். குறிப்பாக அதிகளவு பணிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தாங்கி கொள்ள முடியாத சோமாச்சாரியா, குடும்ப உறுப்பினர்களிடம் இதை கூறி, புலம்பி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் ஆறுதல் கூறினார்கள். மேலும் தந்தைக்கு உதவியாக பிள்ளைகள் வேலைக்கு செல்ல தொடங்கினர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இது சோமாச்சாரியாவின் மனதை பாதித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பணிக்கு சென்ற சோமாச்சாரியா வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவர் வேலை பார்த்து வந்த போக்குவரத்து பணிமனைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை. மேலும் அங்கிருந்த அதிகாரிகள் சோமாச்சாரியா வீட்டிற்கு ெசன்றுவிட்டதாக கூறினர். இந்தநிலையில் நேற்று காலை சோமாச்சாரியா சீனிவாஸ்பூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்த பொதுமக்கள் சீனிவாஸ்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் உடல் நலக்குறைவு மற்றும் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் அதிகளவு தொல்லை கொடுத்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சோமாச்சாரியாவின் மகன் அனில்குமார் சாரி கொடுத்த புகாரின் பேரில் சீனிவாஸ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்