உங்களுக்கு ஒரு நற்செய்தி- என்னால் சரளமாக பேச முடிகிறது - விரைவில் சத்சங்கம் - நித்யானந்தா
நித்யானந்தாவால் சரளமாக பேச முடிவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் நெட்டிசன்கள் குருநாதா வந்துட்டீங்களா என கேட்டு நலம் விசாரித்து வருகிறார்கள்.;
புதுடெல்லி:
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில முகநூல் (பேஸ்புக்) பதிவுகள் வெளியாகி வருகின்றன.
அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என கூறி இருந்தார்.
இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தையும், சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மீண்டும் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஒரு பேஸ்புக் பதிவை நித்தியானந்தா வெளியிட்டிருந்தார். அதில் கைலாசாவாசிகளே, சமாதி நிலை 5 வகைப்படும்.
அவற்றில் முதல் நிலை சுசுப்தி- இது ஆழ்ந்து தூங்கும் நிலை, 2. ஸ்வப்னா- கனவு நிலை, 3. ஜெக்ரத்- விழித்திருக்கும் நிலை, 4. துரியா- சுயநினைவு நிலையில் மகா கைலாசத்தை உணருதல், 5. துரியாதிதா- உயிருடன் இருக்கும் நிலை. நான் தொடர்ந்து துரியாதிதா நிலையில் இருந்து வருகிறேன்.
உங்களது பிரார்த்தனைகள் கைகூடியுள்ளது. தினந்தோறும் நித்ய சிவ பூஜையின் போது நான் ஜக்ரத் நிலை அதாவது விழித்திருக்கும் நிலையில் இருப்பேன். மேற்கண்ட 5 நிலைகளும் எனக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இதைத்தான் சகஜ சமாதி என்பார்கள். உங்களுக்கு ஒரு நற்செய்தி- என்னால் சரளமாக பேச முடிகிறது.
நான் சமாதி நிலையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்களும் என்னை சுற்றியிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டன. சகஜ சமாதிக்கு வந்துவிட்டால் இனி நான் வழக்கமாக சத்சங்கங்களை நடத்துவேன். ஆன்மீக வகுப்புகளையும் மேற்கொள்வேன். அனைவருக்கும் நன்றி என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.