நான் உங்களுக்கு சேவை செய்வதற்கு வலுவான பா.ஜனதா ஆட்சியை தாருங்கள்; பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
தாவணகெரேயில் நடந்த விஜய சங்கல்ப யாத்திரையின் நிறைவு பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசுகையில், நான் உங்களுக்கு சேவை செய்வதற்கு கர்நாடகத்தில் வலுவான பா.ஜனதா ஆட்சியை தாருங்கள் என்றார்.
பெங்களூரு:
விஜய சங்கல்ப யாத்திரை
கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
இதில் தற்போதைய ஆளுங்கட்சியான பா.ஜனதா மீண்டும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த 1-ந் தேதி சாம்ராஜ்நகரில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கிவைத்தார். பெலகாவி, பீதர், பெங்களூரு என மாநிலத்தின் 4 திசைகளிலும் இருந்தும் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. இந்த யாத்திரை நேற்று தாவணகெரே மாவட்டத்தை வந்தடைந்தது.
பிரமாண்ட நிறைவு விழா
இதையடுத்து, விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழாவையொட்டி பா.ஜனதா கட்சி சார்பில் தாவணகெரேயில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சட்டசபை தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்பதால், கடந்த 2 மாதத்தில் 6 முறை பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து பல்வேறு வளர்ச்சி பணிகளையும், திட்டங்களையும் தொடங்கி வைத்திருந்தார். தேர்தல் நெருங்குவதால் 7-வது முறையாக நேற்று கர்நாடகத்திற்கு வந்த பிரதமர் மோடி, கட்சி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.
திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி
இதற்காக நேற்று காலையில் பெங்களூருவுக்கு வந்திருந்த அவர், ஒயிட்பீல்டு- கே.ஆர்.புரம் இடையே புதிய மெட்ரோ ரெயில் சேவையையும், சிக்பள்ளாப்பூரில் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்ைதயும் தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று மதியம் 3 மணியளவில் தாவணகெரேவுக்கு பிரதமர் மோடி வந்தார். பொதுக்கூட்டத்திற்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
இதையடுத்து, பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை வரை திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். அவருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் உடன் சென்றார்கள். அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து ஜீப்பில் இருந்தபடியே கைகளை அசைத்தபடி பிரதமர் மோடி சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு மக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை பிரதமர் மோடி கனிவுடன் மகிழ்ச்சி பொங்க ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அங்கு பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மாநகராட்சி தேர்தல் வெற்றி
பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கலபுரகியில் நடந்த மாநகராட்சி தேர்தலே சாட்சியாகும். அகில இந்திய காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரில் மேயர் மற்றும் துணை மேயர் பதவி பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது. இது நமக்கு கிடைத்த வெற்றியாகும். விஜய சங்கல்ப யாத்திரையின் மூலமாக நமது பொறுப்பு அதிகரித்துள்ளது.
நமது கட்சியின் தொண்டர்கள் ஒவ்வொரு பூத் மட்டத்திலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும். முன்னாள் முதல்-மந்திரி (சித்தராமையா), அக்கட்சியின் தொண்டரின் கன்னத்தில் அறைந்தார். அவரால் மாநில மக்களுக்கு கவுரவம் கொடுக்க சாத்தியமா?. பா.ஜனதாவில் தொண்டர்களை கவுரவமாக நடத்துகிறோம். கட்சியின் தொண்டர்கள் என்னுடைய சகோதரர்கள் ஆவார்கள்.
நிலையான ஆட்சி
பெங்களூருவில் ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்துள்ளேன். பெங்களூரு-மைசூரு அதிவிரைவு சாலையை திறந்து வைத்துள்ளேன். துமகூருவில் எச்.ஏ.எல். தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இரட்டை என்ஜின் அரசால் மட்டுமே இது சாத்தியமாகும். இரட்டை என்ஜின் அரசின் மக்கள் சேவையை தெரிந்து கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
நாட்டுக்கு வேகமான வளர்ச்சி தேவையாகும். இதற்காக கர்நாடகத்தில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற மக்கள் ஆதரவு தேவையாகும். கர்நாடகம் நீண்ட காலமாக சந்தர்ப்பவாத மற்றும் சுயநல கூட்டணி ஆட்சிகளை கண்டுள்ளது. இதுபோன்ற அரசுகளால் கர்நாடகம் நஷ்டத்தையே சந்தித்தது. எனவே மாநிலத்தில் வேகமான வளர்ச்சிக்கு பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மையும், நிலையான ஆட்சியும் தேவையாகும்.
உங்களுக்கு சேவை செய்ய...
கர்நாடகத்தை சூழ்ச்சி அரசியலில் இருந்து வெளியே கொண்டு வந்து, வேகமாக முன்னெடுத்து செல்வதே முதல் வேலையாக இருக்க வேண்டும். நான் உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வலுவான ஆட்சி தேவை. பா.ஜனதாவை வெற்றி பெற செய்து, வலுவான ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளிக்கின்றனர். இதற்காக உத்தரவாத அட்டையுடன் அலைகின்றனர். இமாசல பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?. கர்நாடகத்தை காங்கிரஸ் கட்சி ஏ.டி.எம். மையமாக மாற்ற முயற்சிக்கிறது. இதற்கு மக்கள் அனுமதி வழங்க கூடாது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
லட்சக்கணக்கான மக்கள்
பொதுக்கூட்டம் முடிந்ததும் தாவணகெரேயில் இருந்து சிவமொக்காவுக்கு ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில் நேற்று மாலையில் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா, நளின்குமார் கட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு இருந்தது.
விழாவையொட்டி தாவணகெரே நகரம் முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.