12-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர ஆண்களை விட பெண்களே அதிக விருப்பம் - ஆய்வில் தகவல்

குறைந்தபட்சம், இளங்கலை பட்டப்படிப்பாவது படிக்க பெண்கள் விரும்புகிறார்கள்.;

Update:2024-01-19 11:34 IST

புதுடெல்லி,

ஆண்களை விட அதிகமான பெண்கள், 12-ம் வகுப்புக்கு மேல், படிப்பை தொடர விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர கல்வி நிலவர அறிக்கையில் (அசேர்) இத்தகவல் கூறப்பட்டுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடந்து வந்த 'அசேர்' ஆய்வு, 2016-ம் ஆண்டுக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுக்கான ஆய்வு, 26 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் 34 ஆயிரத்து 745 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்களிடம் பேசியதன் அடிப்படையில், 12-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர விரும்பும் ஆண்களை விட பெண்கள் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

ஆண்கள், தங்கள் சம வயது பையன்கள் சம்பாத்தியம் ஈட்டுவதை பார்த்து, கூடிய விரைவில் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். மேலும், ஆண்கள், தாங்கள் மேற்படிப்பு படிக்க விரும்பாதநிலையில், பெற்றோர் என்ன சொன்னாலும் படிப்பை கைவிட்டு விடுகின்றனர். அந்தவகையில், அவர்களால் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க முடிகிறது.

ஆனால், பெண்களை பொறுத்தவரை, அவர்களால் தீர்மானிக்க முடியாதநிலை உள்ளது. பெண்களுக்கு திருமண வயதுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. திருமணம் ஆகும்வரை படித்துக்கொள்ள அவர்கள் விருப்பப்படுகின்றனர். குறைந்தபட்சம், இளங்கலை பட்டப்படிப்பாவது படிக்க விரும்புகிறார்கள்.

பெண்கள் மேற்படிப்பு படிக்க விரும்புவதற்கு 2 காரணங்கள். தாங்கள் சிறந்த குடும்ப தலைவியாக திகழ மேற்படிப்பு உதவும் என்று கருதுகிறார்கள். மற்றொன்று, மேற்படிப்பை உண்மையிலேயே அவர்கள் விரும்புகிறார்கள். வீட்டு வேலைகளில் இருந்து தப்பிக்க படிப்பை தேர்வு செய்யும் பெண்களும் உள்ளனர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்