குப்பை கிடங்கு தீ விபத்து: கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரளாவில், கழிவு மேலாண்மை தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்துள்ளது.;
கொச்சி,
கொச்சி குப்பை கிடங்கு தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக, கொச்சி மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திணறியது. நீண்ட போராட்டத்திற்கு பின் கடந்த 15-ம் தேதி தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் கொச்சி நகரில் பல பகுதிகளில் நச்சு புகை பரவி, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கொச்சி மாநகராட்சிக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்திற்கு கேரள அரசு ஏன் தார்மீக பொறுப்பேற்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள பசுமை தீர்ப்பாயம், கேரளாவில், கழிவு மேலாண்மை தோல்வி அடைந்து விட்டதாகவும் விமர்சித்துள்ளது.