திடீர் மாரடைப்பு... உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு

மாரடைப்பு காரணமாக பாண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்தார் அன்சாரி நேற்று காலமானார்.;

Update:2024-03-29 00:11 IST

கோப்புப்படம்

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார். 60 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் அவருக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை முன்வைத்தனர். இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுனில் கவுசால் கூறுகையில், "வயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் உள்ள பிரச்சனை காரணமாக அன்சாரி அதிகாலை 3.45 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்" என்று அவர் கூறினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.வான முக்தார் அன்சாரி, மௌ சதார் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றவர். கடைசியாக 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 2005ம் ஆண்டு முதல் உ.பி. மற்றும் பஞ்சாபில் சிறையில் இருந்தார். அவர் மீது 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உ.பி.யின் வெவ்வேறு நீதிமன்றங்களால் செப்டம்பர் 2022 முதல் எட்டு வழக்குகளில் அன்சாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

2023ம் ஆண்டு உத்தரப் பிரதேச போலீசார் வெளியிட்ட 66 குண்டர்கள் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. முக்தார் அன்சாரி போலி என்கவுன்டரில் கொல்லப்படலாம் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் முன்பு அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம், சிறைக்குள் அவருக்கு விஷம் கலந்த உணவு வழங்கப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அன்சாரியின் வழக்கறிஞர் குற்றம் சாட்டி இருந்தார். 40 நாட்களுக்கு முன்பே விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்