சிவமொக்கா மாவட்டத்தில், ரசாயன கலவையால் தயாரான விநாயகர் சிலைகளை வைக்க கூடாது -கலெக்டர் செல்வமணி உத்தரவு
சிவமொக்கா மாவட்டத்தில் ரசாயன கலவையால் தயாரான விநாயகர் சிலைகளை யாரும் வைக்க கூடாது என்று கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.
சிவமொக்கா: சிவமொக்கா மாவட்டத்தில் ரசாயன கலவையால் தயாரான விநாயகர் சிலைகளை யாரும் வைக்க கூடாது என்று கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
சிவமொக்கா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கான வழிகாட்டுதலை நேற்று மாவட்ட கலெக்டர் செல்வமணி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் அனைவரும் பண்டிகையை கொண்டாட வேண்டும். அனைவரும் மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து விழாவை கொண்டாட வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நீண்ட நாட்களுக்கு வைக்காமல் விரைந்து அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்துவிட வேண்டும்.
ரசாயன கலவையால்...
5 அடிக்கு மேல் உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைக்க கூடாது. சிலைகளை வீட்டின் அருகே உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளிலோ, மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் தண்ணீர் தொட்டியிலோ கரைக்க வேண்டும். ரசாயன கலவையால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை யாரும் வைக்க கூடாது. விநாயகர் சிலைகளை வைக்க போலீசாரிடம் அனுமதி பெறுவது அவசியம்.
பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.