காசு வைத்து சூதாட்டம்; 7 பேர் கைது
சிந்தாமணியில் காசு வைத்து சூதாடிய 7 பேரை போலீசாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனா்.;
சிந்தாமணி
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா சொக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள மலை அடிவாரத்தில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக சிந்தாமணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சொக்கனஹள்ளி கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 7 பேர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே சுதாரித்து கொண்ட போலீசார், தப்பியோட முயன்ற 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், படாளம்மா கோவில் பகுதியை சேர்ந்த குபேர் சிங், கித்வாய் நகரை சேர்ந்த ஜபியுல்லா, ராஜேஷ், பிரபாகர், கஜேந்திரா, நாகராஜ், ஆனந்த் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் ரொக்கம், 3 மோட்டார் சைக்கிள்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.