ஜி-20 மாநாடு: ருசியான சைவ விருந்துக்கு ஏற்பாடு - தினை உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம்
இந்த ஆண்டை தினை ஆண்டாக இந்தியா கடைப்பிடிப்பதால் தினை உணவுகள் அனைத்தும் விருந்தில் இடம்பெறுகின்றன.;
புதுடெல்லி,
ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமை தாங்கி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் ஜி-20 தொடர்பான பல கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் உச்சி மாநாடு நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் மாநாடு சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் மாநாட்டுக்கான ஒவ்வொரு வேலையையும் செதுக்கி செய்துள்ளனர். உணவு ஏற்பாடுகளும் அந்த வகையிலேயே செய்யப்பட்டு உள்ளது.
மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் முழுக்க முழுக்க சைவ உணவுகளுக்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டை தினை ஆண்டாக இந்தியா கடைப்பிடிப்பதால் தினை உணவுகள் அனைத்தும் விருந்தில் இடம்பெறுகின்றன.
மாநாட்டுக்கான உணவுகள் தயாரிப்பை தாஜ் ஓட்டல் நிர்வாகம் ஏற்றுள்ளது. உணவு தயாரிப்பு பணியில் 120-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் சுமார் 500 உணவு வகைகளை தயாரிக்கிறார்கள். இந்தியாவின் அனைத்துவகை பிரபல உணவுகளும் சமைக்கப்படுகின்றன.
குறிப்பாக தென் இந்திய மசாலா தோசை, ராஜஸ்தானின் தால்பாடி சுர்மா, பீகாரின் லிட்டி சோக்கா, பெங்காலி ரசகுல்லா, சிறப்பு தினை தாலி போன்றவை சமைக்கப்பட உள்ளன. இது தவிர பானிபூரி, சட்பதி சாட், தஹிபல்லா, சமோசா, பிரட் பகோரா, பேல்பூரி, வடபாவ் போன்ற உணவுகளும் தயார் செய்யப்படுகின்றன.
மாநாட்டில் அசைவ உணவுகள் எதுவும் கிடையாது. தலைவர்கள் தங்குகிற ஓட்டலிலும் தினை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. உணவுகளுடன் பலவகை பாரம்பரிய இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழத்துண்டுகளும் வைக்கப்படுகின்றன.
தலைவர்கள் சாப்பிடுவதற்காக புத்தம்புது வெள்ளிப்பாத்திரங்கள், தங்கமுலாம் பூசப்பட்ட பாத்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து மட்டும் தட்டு, தம்ளர், ஜாடி என கலைநயம் மிக்க 15 ஆயிரம் வெள்ளி பொருட்கள் வரவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.