ஒட்டுமொத்த சீக்கியர்களே ஒன்று திரளுங்கள் - அம்ரித்பால் சிங் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

பஞ்சாப் விவகாரத்தில் சீக்கியர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-29 15:17 GMT

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்கு பிரிவினைவாதிகள் மீண்டும் களம் இறங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கு பிந்தரன்வாலே என்ற பிரிவினைவாதத் தலைவன் இதை ஒரு இயக்கமாக நடத்தினார். அவர் 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அதிரடி உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கையில் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்துதான் காலிஸ்தான் தனிநாடு பிரிவினைவாத கோரிக்கை வலுவிழந்தது.

ஆனால் தற்போது மீண்டும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுந்து வருகின்றன. இதன் பின்னால் 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பு அரணாக நிற்கிறது. மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் தற்போதைய தலைவர், அம்ரித் பால் சிங் (வயது 30) ஆவார். இவர், காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகளினாலும், மத போதகத்தாலும் கடந்த 6, 7 மாதங்களாக பிரபலமாகி வருகிறார். தான் அடுத்த பிந்தரன்வாலே என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். வன்முறையை கட்டவிழ்த்து விடுவதில் அவர் கவனம் செலுத்துவது, பஞ்சாப் அரசுக்கு பெருத்த தலைவலியாக மாறி வருகிறது.

கடந்த மாதத்தில் இந்த அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், ஒரு வழக்கில் அமிர்தசரஸ் புறநகரான அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் போருக்குப் போவது போல கைகளில் வாள்களையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்று தடுப்பு வேலிகளையெல்லாம் தகர்த்தெறிந்து அந்த போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தங்கள் கூட்டாளியை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரும் பதற்றமான சூழலைத் தவிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ் விடுவித்தது. இது, பிரிவினைவாதிகள் முன்பாக ஆம் ஆத்மி அரசு அடிபணிந்து விட்டது என்ற அவப்பெயரை சந்திக்க வைத்தது. இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மாநில அரசு முடிவு எடுத்து அதற்கான அதிரடி நடவடிக்கையை தொடங்கியது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் ஆலோசித்து மத்திய படைகளை பாதுகாப்புக்காக பெற்றுள்ளதைத் தொடர்ந்தே மாநில அரசு இதில் தீர்க்கமான முடிவு எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் இதுவரையில் அம்ரித்பால் சிங் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருடைய நிதி விவகாரங்களை கையாள்கிற கூட்டாளி தல்ஜீத் சிங் கல்சியும் கைது செய்யப்பட்டு விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், அமிர்தசரஸ், அரியானா, புதுடெல்லி உட்பட பல்வேறு இடங்களில், தன் அடையாளங்களை மாற்றியபடி சுற்றித் திரிந்த அம்ரித்பால் சிங்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அம்ரித்பால் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது,

நம் சீக்கிய சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. போலீசிடமிருந்து என்னை காப்பாற்றியது கடவுள் தான். ஒட்டு மொத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இனி ஒன்று சேர வேண்டிய நேரம் இது. பஞ்சாப் விவகாரத்தில் சீக்கியர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்த வீடியோ வெளிநாட்டில் இருந்து எடுக்கப்பட்டது எனவும், இரண்டு நாட்கள் முன்பு எடுக்கப்பட்டது எனவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அம்ரித்பால் சிங் பஞ்சாப் திரும்பியதாகவும், சரணடையத் திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்ததையடுத்து இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்